தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணான சேலத்தில் அக்கட்சிக்கு தர்மசங்கடமான சூழல் உருவாகியுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில், அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அதிரடியாக ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான மாதேஸ்வரன் (2011-2016), சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்பி முன்னிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமமுக-வில் இணைந்து 2021 தேர்தலில் களம் கண்ட மாதேஸ்வரன், இடையில் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவர் திமுக பக்கம் சாய்ந்திருப்பது அதிமுக தலைமைக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் பலமாக பார்க்கப்படும் கொங்கு மண்டலத்திலேயே, அதிலும் குறிப்பாகச் சேலத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரை திமுக குறிவைத்து இழுத்திருப்பது, அக்கட்சியின் வியூகத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.
ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நகர்வு, சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிகழும் இத்தகைய கட்சித் தாவல்கள் வரப்போகும் தேர்தலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



