தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 6:40 மணிக்கே நடிகர் அஜித் தனது மனைவியுடன் வருகை தந்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்களின் கூட்டத்தைத் தவிர்க்கவும் அவர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வாக்களித்த பின் தனது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தைக் காட்டிய அவர், செய்தியாளர்களிடம் ஏதும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால் மாற்றம் தேவையில்லை என அஜித் செய்தியாளர்களிடம் கூறியதாக ஒரு சில ஊடகங்களில் செய்தி பரவியது. இந்த நிலையில் அப்படி எதுவும் கூறவில்லை என அஜித் மேளாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
விஜய்க்கு எதிராக பல நடிகர்கள் அரசியல் கருத்துக்களை பேசினாலும், இதுவரை எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தோ, எதிர்ப்பு தெரிவித்தோ அரசியல் பேசாமல் தனது தனி வழியில் அஜித் பயணித்து வருகிறார். இந்த சூழலில் விஜய்க்கு எதிரான செய்திக்கு அஜித் தரப்பு விளக்கம் அளித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. அஜித் மறைமுகமாக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற யூகமும் எழுந்துள்ளது.
Read more: களைகட்டும் ஜனநாயக திருவிழா.. ஓட்டுப் போடுவதற்கு முன் EVM முன்பு ரஜினி செய்த செயல்..! வைரல் வீடியோ..!



