பல நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்கள் குழு ஒன்று, மெட்டா (Meta Platforms Inc.) நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. “என்ட்-டூ-என்ட் குறியாக்கம்” (end-to-end encryption) மூலம் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படுவதாக பொய்யாக விளம்பரப்படுத்தி, அதே நேரத்தில் தனிப்பட்ட உரையாடல்களை சேமித்து, பகுப்பாய்வு செய்து, அவற்றை அணுகுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது பயனர்களின் தனியுரிமையை மிகக் கடுமையாக மீறுவது என்றும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யு.எஸ். அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மனுதாரர்கள் உள்ளனர். வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் செய்திகள் முழுமையாக தனிப்பட்டவை, பாதுகாப்பானவை என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை மேட்டா மற்றும் வாட்ஸ்அப் ஏமாற்றுகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர். உண்மையில், அந்த செய்திகளின் உள்ளடக்கத்தை நிறுவனமே பார்க்கவும் கையாளவும் முடிகிறது என வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியுரிமை குறித்து பொய்யான வாக்குறுதிகள்
இந்த வழக்கில் “வாட்ஸ்அப் பயனர்களின் ‘தனிப்பட்டவை’ எனக் கூறப்படும் உரையாடல்களின் பெரும்பகுதியை மேட்டா சேமிக்கிறது, பகுப்பாய்வு செய்கிறது. மேலும் அவற்றை அணுகும் திறன் கொண்டுள்ளது” என்று மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் ஆரம்ப கட்டத்தில் வெளியான வழக்கு விவரங்களில், குறிப்பிட்ட தொழில்நுட்ப ஆதாரங்கள் அல்லது முழுமையான விளக்கங்கள் வழங்கப்படவில்லை.
இந்த வழக்கு, வாட்ஸ்அப்பின் முக்கிய விற்பனை அம்சமாக இருந்த “என்ட்-டூ-என்ட் குறியாக்கம்” என்பதையே நேரடியாக சவால் செய்கிறது. இந்த குறியாக்க முறையால், அனுப்புபவரும் பெறுபவரும் தவிர வேறு யாரும், மெட்டாவோ அல்லது மூன்றாம் தரப்போ – செய்திகளைப் படிக்க முடியாது என்று வாட்ஸ்அப் நீண்ட காலமாக விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால் இந்த வழக்கில், அந்த தனியுரிமை வாக்குறுதிகள் ஏமாற்றும் தன்மை கொண்டவை என்றும், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் தரவு தனியுரிமைச் சட்டங்களை மீறக்கூடியவை என்றும் வாதிடப்படுகிறது.
மெட்டா மறுப்பு
எனினும் மெட்டா நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளது. இந்த வழக்கை “அர்த்தமற்றது” என்று விவரித்துள்ள நிறுவனம், வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு தாம் முழுமையாக உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், என்ட்-டூ-என்ட் குறியாக்கம் காரணமாக மெட்டாவால் செய்தி உள்ளடக்கத்தைப் படிக்க முடியாது என்றும், இந்த குற்றச்சாட்டுகளை எதிர்த்து வலுவாக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது அதிகரிக்கும் கண்காணிப்பு
இந்த வழக்கு, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தரவு நடைமுறைகள் மீது உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் கண்காணிப்பு சூழலில் எழுந்துள்ளது. இதற்கு முன்பும், வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை மாற்றங்கள் மற்றும் இந்தியாவை உட்பட பல நாடுகளில் விதிக்கப்பட்ட அபராதங்கள் போன்ற சர்ச்சைகள் நடந்துள்ளன. இந்த வழக்குக்கு “கிளாஸ்-ஆக்ஷன்” அந்தஸ்து கிடைத்தால், இது கோடிக்கணக்கான பாதிக்கப்பட்ட பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்காக மாறலாம். அப்போது இழப்பீடு அல்லது மேட்டா வாட்ஸ்அப் தரவை கையாளும் முறையில் மாற்றங்களை கட்டாயப்படுத்தும் உத்தரவு (injunctive relief) போன்றவை கோரப்படலாம்.
தொழில்நுட்ப பின்னணி குறிப்பு
தொழில்நுட்ப நிபுணர்கள் ஏற்கனவே கூறி வரும் விஷயம் என்னவென்றால், என்ட்-டூ-என்ட் குறியாக்கம் என்பது, தகவல் அனுப்பப்படும் போதும் (in transit), பயனரின் சாதனத்தில் சேமிக்கப்படும் போதும் (at rest) உள்ள செய்தி உள்ளடக்கத்திற்கே பொருந்தும். ஆனால் மெட்டாடேட்டா (யார் யாருடன் எப்போது பேசினார்கள் போன்ற தகவல்கள்) அல்லது கிளவுட் பேக்கப் தரவுகள் முழுமையாக பாதுகாக்கப்படாது. இருப்பினும், இந்த புதிய வழக்கு அதையும் தாண்டி, மேட்டா ஊழியர்கள் அல்லது அதன் அமைப்புகள் நேரடியாக உரையாடல்களின் உள்ளடக்கத்தையே அணுகுகின்றன என்று குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது.
Read More : தொடர் கண்ணிவெடித் தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினர் காயம்..! சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்..!



