தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன..
சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது.. அந்த வகையில் கடந்த மாதம் கோவை சூலூரில் 10 சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. அதே போல் சென்னையில் மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்த சூழலில் நேற்று கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது.. திருவள்ளூர், அம்பத்தூர், அண்ணாசாலை, பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது.. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் திமுக ஐடி விங் இந்த சம்பவங்கள் குறித்து விஜய் தலைமையிலான தவெக அரசை கடுமையாக சாடி உள்ளது.. தனது எக்ஸ் பக்கத்தில் “ 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்! ‘சிங்கப்பெண் படை’ என்று ஜூன் 9-ல் பெரும் விளம்பரம் செய்த சில நாட்களிலேயே, ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்து, சென்னை குற்றவாளிகளின் வேட்டைக் களமாக மாறியிருப்பதை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ அம்பலப்படுத்தியுள்ளது! முதுகெலும்பற்ற முதலமைச்சரே, இதுதான் நீங்கள் சொன்ன அந்த மகத்தான ‘மாற்றமா’?
உள்வட்டச் சாலைகளில் காவல்துறை ரோந்துப் பணி அறவே இல்லாததை எதிர்த்து மக்கள் போராடும் நிலையில், மக்கள் தொடர்பு விளம்பரங்களில் மட்டுமே குறியாக இருக்கும் உங்கள் ‘சோபா மாடல்’ அமைச்சர்கள் பதுங்கிக் கொள்கிறார்கள்.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவைச் சரிசெய்வதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவது, சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பத்திரிகையையே மிரட்டுவது என உங்கள் கோழைத்தனமான அரசு வழக்கமான தந்திரங்களையே கையாள்கிறது!
உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் துணிவோ திறமையோ இல்லாத நிலையில், செய்தியாளர்களையும் கேள்வி எழுப்பும் குடிமக்களையும் ஆபாசமாகத் திட்டுவதற்கு ‘காசு கொடுத்து நியமிக்கப்பட்ட வசைபாடும் படை’யை ஏவிவிடுகிறீர்கள்!
உங்கள் சினிமாத்தனமான விளம்பர வீடியோக்களோ அல்லது உண்மையைச் சொல்பவர்கள் மீதான கோழைத்தனமான தாக்குதல்களோ அல்ல.. தமிழ்நாட்டின் குழந்தைகளுக்குத் தேவை உண்மையான பாதுகாப்பு!” என்று காட்டமாக விமர்சித்துள்ளது..
Read More : Flash : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.5,000 சரிவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!



