மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த விமானம் மகாராஷ்டிராவின் பாராமதியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் அஜித் பவார் உள்ளிட்ட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.. அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.. துரதிர்ஷ்டவசமான அந்தத் தரையிறக்கத்திற்கு சில வினாடிகளுக்குப் பிறகு, புனே நகரில் உள்ள விமான நிலையத்தில் பலத்த வெடிப்புகளும் பெரும் தீ விபத்தும் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்..
இந்த விபத்தில் நேரில் பார்த்தவர் ஒருவர் பேசிய போது . “நான் இதை என் கண்களால் பார்த்தேன். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. விமானம் கீழே இறங்கியபோது, அது விபத்துக்குள்ளாகும் என்று தோன்றியது, அது விபத்துக்குள்ளானது. பின்னர் அது வெடித்தது. ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது,” என்று தெரிவித்தார்.
மேலும், விபத்து மற்றும் தீ விபத்திற்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தில் 4 அல்லது 5 முறை பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். “மேலும் பலர் இங்கு வந்தனர், அவர்கள் விமானத்தில் இருந்தவர்களை வெளியே இழுக்க முயன்றனர். ஆனால் இது ஒரு பெரிய தீ என்பதால், மக்களால் உதவ முடியவில்லை. அஜித் பவார் விமானத்தில் இருந்தார், இது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
அந்த விமானத்தில் மொத்தம் ஐந்து பேர் பயணம் செய்தனர் – மகாராஷ்டிர துணை முதல்வரும் என்சிபி தலைவருமான அஜித் பவார், மேலும் இரண்டு பணியாளர்கள் (ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு உதவியாளர்) மற்றும் இரண்டு விமானப் பணியாளர்கள் (தலைமை விமானி மற்றும் முதல் அதிகாரி).
விமான விபத்து தொடர்பாக வீடியோக்களில், ஒரு திறந்தவெளியில் சிதறிக்கிடந்த விமானத்தின் எரிந்து கொண்டிருக்கும் பாகங்களிலிருந்து புகை மண்டலங்கள் எழுவது காணப்பட்டது.
பாராமதி விமான நிலைய மேலாளர் சிவாஜி தவரே பேசிய போது “ VT SSK என்ற விமானம் தரையிறங்க முயன்றபோது, ஓடுபாதையின் ஓரத்தில் சென்று மோதி வெடித்தது. அது லியர் ஜெட் 45 ரக விமானம் என்றும், மும்பையில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்த விமான விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது..



