தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதன் மூலம் அரசியல் தலைவராக மாறினார்.. விஜய்யின் தவெக கட்சி களம் கண்ட முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றது.. எனினும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.. கடந்த மாதம் 10-ம் தேதி தவெக விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்..
முதல்வர் விஜய் இன்று இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவரது பிறந்தநாளை தவெகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் அன்று அவரின் சொத்து மதிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்..
முதல்வர் விஜய் மார்ச் மாத இறுதியில் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.. அதில் தனது நிகர சொத்து மதிப்பு ரூ. 624 கோடி என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் விஜய்யின் மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 404 கோடியாகவும், அசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 220 கோடியாகவும் உள்ளது. தனக்கு எந்தவிதமான கடனும் இல்லை என்று அவர் அறிவித்துள்ளார்.
ஒரே சேமிப்புக் கணக்கில் ரூ. 213 கோடிக்கும் மேல்
பிரமாணப் பத்திரத்தில் உள்ள மிக முக்கியமான தகவல், சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஒரே ஒரு கணக்கில் ரூ. 213 கோடிக்கும் அதிகமான இருப்புத் தொகை இருப்பதுதான். இது அவரது மொத்த அசையும் சொத்துக்களில் பாதிக்கும் மேலானது.. 2024-25 நிதியாண்டிற்கான அவரது மொத்த வருமானம் ரூ. 184.53 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு வங்கிகளில் நிலையான வைப்புத்தொகைகள் (Fixed Deposits)
விஜய் கூடுதலாக ரூ. 100 கோடியை 4 வங்கிகளில் நிலையான வைப்புத்தொகையாக (Fixed Deposits) வைத்துள்ளார்: ஆக்சிஸ் வங்கியில் ரூ. 40 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 25 கோடி, HDFC வங்கியில் ரூ. 20 கோடி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ. 15 கோடி எனப் பிரித்து முதலீடு செய்துள்ளார்.
சேமிப்புக் கணக்கு இருப்பையும் சேர்த்துப் பார்க்கும்போது, அவரது பணமாக மாற்றக்கூடிய சொத்துக்களில் (liquid wealth) பெரும்பகுதி, சந்தை அபாயம் இல்லாத மற்றும் உறுதியான வருமானம் தரக்கூடிய முதலீட்டு முறைகளிலேயே உள்ளது.. இது எந்த வகையிலும் ஒரு பாதுகாப்பான (conservative) முதலீட்டு அணுகுமுறையாகவே கருதப்படுகிறது.
மிகக் குறைவான பங்குச் சந்தை முதலீடு
விஜய்யின் பங்குச் சந்தை முதலீடுகள் மிகக் குறைவு. விஜய், ‘ஜெயா நகர் ப்ராப்பர்ட்டி பிரைவேட் லிமிடெட்’ (Jaya Nagar Property Pvt Ltd) நிறுவனத்தில் சுமார் ரூ. 19.69 லட்சம் மதிப்புள்ள பங்குகளையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ரூ. 9,600 மதிப்புள்ள பங்குகளையும், ‘சன் பேப்பர் மில் லிமிடெட்’ (Sun Paper Mill Ltd) நிறுவனத்தின் ரூ. 25,000 மதிப்புள்ள பங்குகளையும் வைத்துள்ளார். மொத்தத்தில், அவரது பங்குச் சந்தை முதலீடு ரூ. 20 லட்சத்திற்கும் குறைவு, இது அவர் அறிவித்த நிகர சொத்து மதிப்பில் 0.04%-க்கும் குறைவானதாகும்.
விஜய்யின் செல்வம் கிட்டத்தட்ட முழுவதுமாக பண வைப்புத்தொகைகள், நிலையான வருமானம் தரும் முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் (நிலம்-கட்டிடம்) ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
சென்னை முழுவதும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள்
சுமார் ரூ. 220 கோடி மதிப்புள்ள விஜய்யின் அசையா சொத்துக்கள், குடியிருப்பு, வணிகம் மற்றும் விவசாயம் சார்ந்த சொத்துக்களாக உள்ளன. நீலாங்கரை, சாலிகிராமம், மயிலாப்பூர், எழும்பூர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள 10 வீடுகளின் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 115 கோடி ஆகும். பரிவாக்கம், தியாகராய நகர், சோழிங்கநல்லூர் மற்றும் கொப்பூர் ஆகிய இடங்களில் உள்ள வணிக ரீதியான சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ. 82.8 கோடியாகும். போரூர், சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விவசாயம் சாராத நிலங்களின் மதிப்பு ரூ. 22 கோடியாகும். கொடைக்கானல், வட்டப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தின் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
அவரது வருமான ஆதாரங்களில் சொத்துகள் மூலம் கிடைக்கும் வாடகை வருமானம், சுயதொழில் மற்றும் வட்டி வருமானம் ஆகியவை அடங்கும்.. இதன் மூலம் இந்தச் சொத்துகள் தொடர்ந்து வருவாயை ஈட்டித் தருகின்றன என்பது தெரியவருகிறது.
வாகனங்கள், நகைகள் மற்றும் குடும்பத்தினருக்கான கடன்கள்
விஜய்யிடம் 2024 டொயோட்டா லெக்ஸஸ் 350 (ரூ. 3.01 கோடி), 2024 பிஎம்டபிள்யூ i7 (ரூ. 2 கோடி), 2024 டொயோட்டா வெல்ஃபயர் (ரூ. 1.63 கோடி), 2020 பிஎம்டபிள்யூ 530 (ரூ. 80.5 லட்சம்), 2024 மாருதி ஸ்விஃப்ட் (ரூ. 5.35 லட்சம்) மற்றும் 2025 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் பைக் (ரூ. 67,400) உள்ளிட்ட பல ஆடம்பர சொகுசு கார்கள் உள்ளன.
ரூ. 1.2 கோடி மதிப்புள்ள 883 கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் தன்னிடம் இருப்பதாக முதல்வர் விஜய் கணக்கு காட்டி உள்ளார்.. மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தொகைகள் உட்பட 14 கடன்கள் மற்றும் முன்பண விவரங்களும் அந்தப் பிரமாணப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் தனது மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.6 கோடியும், மகன் ஜேசன் சஞ்சய்க்கு ரூ. 8.78 லட்சமும், திவ்யா சாஷாவிற்கு ரூ. 4.6 லட்சமும் கடனாக வழங்கப்பட்டுள்ளது..
விஜய் தனக்கு எந்தவிதமான கடன் பொறுப்புகளோ அல்லது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளோ இல்லை என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் மனைவி சங்கீதா, மொத்தம் ரூ. 15.76 கோடி மதிப்பிலான சொத்துகளைத் தனித்தனியாகக் கணக்குக் காட்டியுள்ளார்.. இதில் ரூ. 15.51 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ. 25 லட்சம் மதிப்பிலான அசையாச் சொத்துகளும் அடங்கும்.
விஜய் சம்பளம்
திரைப்படங்களில் நடித்த போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக விஜய் வலம் வந்தார்.. அதன்படி அவர் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்திற்காக அவருக்கு ரூ.250 கோடி முதல் 275 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டது.. தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் விஜய்யின் மாதச் சம்பளம் ரூ.2 லட்சம் ஆகும்..
பணக்கார முதல்வர்
ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் இந்தியாவின் பணக்கார முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.. ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாட்டின் 2-வது பணக்கார முதல்வராக இருக்கிறார். ரூ. 624 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் விஜய் 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.. முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து..!



