நமது அன்றாட வாழ்வில் மிகச்சிறிய அங்கமாகத் திகழும் ‘சேஃப்டி பின்’ (Safety Pin), உடை கிழிந்தால் ஒட்டுப்போடுவது முதல் சேலை அலங்காரம் வரை பல்வேறு இக்கட்டான சூழல்களில் நமக்குக் கைகொடுக்கிறது. பல தலைமுறைகளாக புழக்கத்தில் இருக்கும் இந்தச் சிறிய ஊசியின் அடிப்பகுதியில் ஒரு வட்ட வடிவத் துளை இருப்பதை நாம் கவனித்திருப்போம். ஏதோ அலங்காரத்திற்காகவோ அல்லது நூலை கோர்ப்பதற்காகவோ அந்த ஓட்டை வைக்கப்பட்டிருப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்த ஒரு சிறிய வளைவிற்குப் பின்னால் ஆச்சரியமான ஒரு அறிவியல் நுணுக்கம் ஒளிந்துள்ளது.
இந்த அரிய கருவியை 1849-ஆம் ஆண்டு வால்டர் ஹன்ட் என்ற அமெரிக்கர் கண்டறிந்தார். தன்னிடம் இருந்த ஒரு பழைய கம்பித் துண்டை வைத்து எதேச்சையாக திருகிக் கொண்டிருந்தபோதுதான், அதன் ஒரு முனையில் ஊசியையும் மறுமுனையில் ஒரு பிடிப்பையும் இணைக்கும் யோசனை அவருக்குத் தோன்றியது. அவர் உருவாக்கிய அந்தத் தொடக்க கால வடிவமைப்பே எவ்வித மாற்றமுமின்றி இன்றும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஊசியின் அடியில் நாம் பார்க்கும் அந்தத் துளை, உண்மையில் ஒரு ஓட்டை அல்ல; அது ஒரு ‘டார்ஷன் ஸ்பிரிங்’ (Torsion Spring) எனப்படும் கம்பிச் சுருள் அமைப்பு.
ஏன் அந்த சுருள் அமைப்பு அவசியம்..?
அந்த ஊசியின் அடிப்பகுதியை நாம் ஏன் வளைக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. ஒருவேளை அந்த இடத்தில் வட்டமான வளைவு இல்லாமல், கம்பியை நேரடியாக ‘V’ வடிவிலோ அல்லது ‘L’ வடிவிலோ மடித்திருந்தால், நாம் ஓரிரு முறை ஊசியைத் திறந்து மூடும்போதே அந்த அழுத்தம் தாங்காமல் கம்பி உடைந்து போயிருக்கும். கம்பியை வளைக்கும்போது உருவாகும் அழுத்தம் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மட்டும் குவியாமல் இருக்கவே இந்தச் சுருள் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
வட்டமாக சுருட்டி வளைக்கப்படும்போது, நாம் கொடுக்கும் அழுத்தம் அந்தக் கம்பி முழுவதும் சமமாக பரவுகிறது. இதனால் ஊசியின் கூர்மையான முனை எப்போதும் விலகியே இருக்க முயற்சிக்கும். நாம் அதை அழுத்திப் பிடிப்பானுக்குள் மாட்டும்போது, அந்தச் சுருள் கொடுக்கும் எதிர் அழுத்தம் தான் ஊசியை இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறது. இதுதான் அந்தச் சிறிய ஊசி உடையாமல் நீண்ட காலம் உழைப்பதற்குக் காரணமாகும். அடுத்த முறை நீங்கள் சேஃப்டி பின்னைப் பயன்படுத்தும்போது, அந்தச் சிறிய வளைவு வெறும் ஓட்டை அல்ல, அதுதான் அந்த ஊசியின் உயிர்நாடி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


