தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்தது.. தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணிக்கு பாஜக தான் தலைமை தாங்கும் என்றும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றும் அமித்ஷா அறிவித்திருந்தார்..
இந்த கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் 18 தொகுதிகளில் ஆளும் கட்சியான திமுகவுக்கும் பாஜகவும் நேரடியாக மோதியது.. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் பணிகளில் உதவுவதற்காக, அந்த 27 தொகுதிகளுக்கும் தனித்தனி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மறுபுறம் திமுக தலைமையில் 20க்கும் மேற்பட்ட கட்சிகளை இணைத்து “மெகா கூட்டணி” மற்றும் வலுவான கூட்டணியை அமைத்தது.. இதற்கு எதிராக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்க எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் பாஜக தலைமை திட்டமிட்டது..
இதற்காக பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்து கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தனர். மேலும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரும் ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
அதேபோல், எடப்பாடி பழனிசாமியும் தனிப்பட்ட முறையில் மாவட்டம் தோறும் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழலில், ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 85.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 2021 தேர்தலை விட கூடுதலாக சுமார் 25 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்ததும், இளம் தலைமுறையினர் அதிகளவில் வாக்களித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.. மேலும் தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு முழுவதும் அமைதியான சூழலில் நடைபெற்றது; பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. பல இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து, பாஜக போட்டியிட்ட தொகுதிகளில் பணியாற்றிய தேர்தல் பணியாளர்களிடமிருந்து விவரமான தகவல்களை கட்சி தலைமை சேகரித்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. மக்களின் மனநிலை, இளைஞர்கள் மற்றும் பெண்கள் யாருக்கு ஆதரவு அளித்தனர், அதிக வாக்குப்பதிவிற்கான காரணங்கள் என்ன, பாஜக வேட்பாளர்கள் எவ்வளவு வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளது, எந்த தொகுதிகளில் வெற்றி சாத்தியம் அதிகம், எந்தெந்த தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு போன்ற விவரங்கள் குறித்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.
இந்த தகவல்கள் அனைத்தும் இரண்டு நாட்களுக்குள் டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகளில் முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக கட்சி முதல் முறையாக அரசியல் களத்தில் இறங்கியிருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அவரது வருகை இளைஞர் வாக்குகளை பிரிக்குமா, அல்லது பாஜகவின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் இந்த கேள்விகளுக்கான விடை கிடைத்துவிடும்..



