உலகப் பொருளாதார அரங்கில் இந்தியா தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. சுமார் 4.187 டிரில்லியன் டாலர் மதிப்புடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இந்தியா தற்போது உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தியாவின் பொருளாதார இன்ஜின் எது..?
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் நாட்டின் இந்த வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளன. இதில், இந்தியாவின் பணக்கார மாநிலம் எது என்ற கேள்விக்கு விடையாக திகழ்கிறது மகாராஷ்டிரா. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மகாராஷ்டிராவின் பங்கு மட்டும் சுமார் 13.30% ஆகும். 2024-25 நிதியாண்டின் மதிப்பீட்டின்படி, இந்த மாநிலத்தின் ஜிடிபி மதிப்பு சுமார் 42.67 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தையும் விட மிக அதிகமாகும். பல பொருளாதாரச் சவால்களைச் சந்தித்த போதிலும், மகாராஷ்டிரா தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஜிடிபி என்பது என்ன..? அது எப்படி கணக்கிடப்படுகிறது..?
ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் பொருளாதார வலிமையை அளவிடும் கருவிதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பையே இது குறிக்கிறது. இதனை 3 முக்கிய முறைகளில் கணக்கிடுகிறார்கள்.
செலவின முறை : மக்களின் செலவு, முதலீடு மற்றும் அரசின் செலவுகள் ஆகியவற்றை கணக்கில் கொள்வது.
வருமான முறை : கூலி, வாடகை மற்றும் லாபம் ஆகியவற்றின் கூட்டுத்தொகை.
உற்பத்தி முறை : மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களின் அடிப்படையில் கணக்கிடுவது.
இந்த அனைத்து அளவீடுகளின் அடிப்படையிலும் மகாராஷ்டிரா முதலிடத்தை பிடிப்பதால், அது இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரை கொண்ட மாநிலமாகவும், இந்தியாவின் பணக்கார மாநிலமாகவும் கருதப்படுகிறது.



