இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நமது அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட ஹெட்போன்கள் மற்றும் இயர்போன்கள், சத்தமில்லாமல் நமது செவித்திறனைப் பறிக்கும் எமனாக உருவெடுத்துள்ளன. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இளைஞர்கள், தாங்கள் ஒரு மிகப்பெரிய சுகாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பதை உணராமலேயே மணிக்கணக்கில் இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் சாதாரண காதுவலியாக தொடங்கும் இந்த பாதிப்பு, காலப்போக்கில் நிரந்தர செவிடாக மாறும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹெட்போன்களால் ஏற்படும் மறைமுக பாதிப்புகள் :
ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் கலாச்சாரம் பெருகிவிட்ட நிலையில், அலுவலகப் பணிகள் முதல் பொழுதுபோக்கு வரை அனைத்திற்கும் ஹெட்போன்களையே மக்கள் நாடுகின்றனர். குறிப்பாக, அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்பதும், தரமற்ற இயர்போன்களை பயன்படுத்துவதும் செவிப்பறையை மெல்ல மெல்ல சிதைக்கின்றன. காதில் ஒருவித கனமான உணர்வு அல்லது லேசான வலி ஏற்பட்டால், அது உங்கள் காதுகள் அபாயக் கட்டத்தில் இருப்பதை உணர்த்தும் முதல் எச்சரிக்கை மணி என்பதை மறந்துவிடக் கூடாது.
மனநலத்தையும் பாதிக்கும் :
தொடர்ச்சியான ஹெட்போன் பயன்பாடு என்பது வெறும் காது கேளாமைப் பிரச்சினையோடு நின்றுவிடுவதில்லை. காதுக்குள் எப்போதும் ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் ‘டினிடஸ்’ (Tinnitus) போன்ற பாதிப்புகள் மன அமைதியைச் சீர்குலைக்கும். இது மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தி, தூக்கமின்மை, கவனச்சிதறல் மற்றும் அதீத மனப்பதற்றத்திற்கு வழிவகுக்கிறது. காதுக்குள் ஏற்படும் தொற்று மற்றும் கடுமையான வலி ஆகியவை ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் முடக்கிவிடும் வல்லமை கொண்டவை.
நிபுணர்களின் ஆலோசனைகள் :
இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க மருத்துவர்கள் சில எளிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கின்றனர். எப்போதுமே 60 சதவீதத்திற்கும் குறைவான ஒலியில் மட்டுமே கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல், ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை காதுகளுக்கு இடைவெளி கொடுப்பது அவசியம். தரமான ‘நாய்ஸ் கேன்சலேஷன்’ (Noise Cancellation) வசதி கொண்ட ஹெட்போன்களைப் பயன்படுத்துவது வெளிப்புறச் சத்தத்தைத் தவிர்க்க உதவும். எல்லாவற்றிற்கும் மேலாக, காதுகளைச் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் கூர்மையான பொருட்களைக் கொண்டு உட்புறச் சவ்வுகளைச் சேதப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.



