தனக்கு வருமானம் இல்லை எனக்கூறினாலும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (Crpc) பிரிவு 125ன் கீழ் கணவன் தனது மனைவிக்கு பராமரிப்பு செலவை வழங்க கடமையுள்ளது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரிந்து வாழும் மனைவிக்கு ரூ.2000 வழங்கவேண்டும் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கணவர் குற்றவியல் சீராய்வு மனுவை அலகாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கு விவரங்களின் அடிப்படையில் 2016ம் ஆண்டு வரதட்சணை புகாரை முன்வைத்து கணவர் மற்றும் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், கணவரை விட்டு மனைவி பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். மேலும், தனக்கு மாதம் 10000 மட்டுமே சம்பளம் கிடைப்பதாகவும், வாடகை வீட்டில் வசிப்பதாகவும், தான் தீவிர நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் மற்றும் தனது பெற்றோர் மற்றும் சகோதரிகளை கவனிக்கவேண்டும் என்றும் கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ரேணு அகர்வால் அடங்கிய அமர்வு, மனைவிக்கு ஆதரவாக ஏற்கனவே வழங்கப்பட்ட பராமரிப்பு தொகையை கணவரிடம் இருந்து வசூலிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு அறிவுறுத்தினார். அதாவது, கணவர் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, மனைவிக்கு ரூ.2000 பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்ற குடும்ப நல நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும், ஒரு நாளைக்கு ஏறக்குறைய கணவர் 300 – 400 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்பதால், மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்குவது கடமை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.