திருமணமான பெண் ஒருவர், மற்றொரு ஆண் மீது சுமத்தும் ‘திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை’ செய்ததாக கூறும் குற்றச்சாட்டு குறித்து உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. சம்மதத்துடன் ஏற்படும் உறவுகளில் விரிசல் உண்டாகும் போது, குற்றவியல் சட்டங்களை தவறாக பயன்படுத்துவது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வழக்கின் பின்னணி என்ன..?
பெண் வழக்கறிஞர் ஒருவர், ஆண் வழக்கறிஞர் ஒருவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த நபர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் நாகரத்னா மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதை சுட்டிக்காட்டினர். “ஒரு பெண் சட்டப்பூர்வமான திருமண உறவில் இருக்கும்போதே, மற்றொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பது சட்டப்படி செல்லாது” என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இருவருக்கும் இடையே நிலவியது ஒருமித்த சம்மதத்துடன் கூடிய உறவு என்றும், அதில் விரிசல் ஏற்படும்போது அதனைப் பாலியல் வன்கொடுமையாக மாற்ற முடியாது என்றும் நீதிபதிகள் விளக்கமளித்தனர்.
இந்தத் தீர்ப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதால், அவர் மீண்டும் ஒரு திருமணத்திற்கு தகுதியற்றவர் என்பதாகும். “சட்டம் ஒருமுறைக்கு மேல் திருமணம் செய்வதை தடை செய்கிறது. முதல் திருமணம் அமலில் இருக்கும்போது, இரண்டாவது திருமண வாக்குறுதியை சட்டப்பூர்வமாக செயல்படுத்த முடியாது. எனவே, அத்தகைய வாக்குறுதியை நம்பி உறவு கொண்டதாக கூறுவதை ஏற்க முடியாது” என்று கூறி, அந்தப் பெண் அளித்த புகாரை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More : பறவைக் காய்ச்சல் பீதி..!! இன்னைக்கு Sunday வேற..!! சிக்கன் சாப்பிடலாமா..? மருத்துவர்கள் பகீர் விளக்கம்..!!



