தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை..
இதனிடையே நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.. எனினும் 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அர்லேகர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த சூழலில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை இன்று மீண்டும் விஜய் சந்தித்தார்.. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத நிலையில் மீண்டும் ஆளுநரை சந்தித்துள்ளார்.. 2-வது முறையாக விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பாரா அல்லது பெரும்பான்மை இல்லை என்று கூறி மேலும் காலம் தாழ்த்துவாரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது..
எனினும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் குறிப்பிட்ட நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பது தான் வழக்கமான நடைமுறை.. ஆனால் ஆட்சியமைக்கவே பெரும்பான்மை உறுப்பினர்கள் தேவை என்று கூறி ஆளுநர், விஜய்க்கு அழைப்பு விடுக்காமல் இருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது..
இதுகுறித்து விசிக துணைப் பொதுசெயலாளர் ஆளூர் ஷாநவாஸ் இதுகுறித்து விஜய்யை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.. தனது பதிவில் ” தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?” என்று குறிப்பிட்டுள்ளார்..



