விண்வெளி ஆராய்ச்சியில் உலகையே வியக்க வைக்கும் எலான் மஸ்க், தற்போது தனது இலக்கை அதிரடியாக மாற்றியுள்ளார். இதுவரை ‘செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம்’ என்பதில் தீவிரமாக இருந்த மஸ்க், இப்போது நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவதே தனது முதல் முன்னுரிமை என்று அறிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு நகரத்தை அமைத்திட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தை விட நிலவு மிக அருகில் இருப்பதால், மனித நாகரிகத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க இதுவே விரைவான வழி என்று மஸ்க் விளக்கியுள்ளார். வரும் மார்ச் 2027-க்குள் நிலவில் ஆளில்லா விண்கலத்தை தரையிறக்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. நிலவை மீண்டும் கைப்பற்றுவதில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், மஸ்கின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
விண்வெளிப் பயணம் மட்டுமல்லாமல், தனது ஏஐ நிறுவனமான ‘xAI’-யையும் ஸ்பேஸ்எக்ஸ் உடன் மஸ்க் இணைத்துள்ளார். இதன் மூலம் விண்வெளியிலேயே டேட்டா சென்டர்களை அமைத்து, ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். பூமியை விட விண்வெளியில் குளிர்ச்சியான சூழல் இருப்பதால், தரவு சேமிப்பு இன்னும் எளிதாக இருக்கும் என்பது அவரது கணிப்பாக உள்ளது.
மறுபுறம், தனது டெஸ்லா நிறுவனத்தையும் ரோபோக்கள் தயாரிக்கும் திசையில் அவர் திருப்பி வருகிறார். நிலவில் நகரம், விண்வெளியில் ஏஐ சென்டர்கள் என எலான் மஸ்க் மனித குலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டார்.
Read More : தினமும் வெந்நீர் அருந்தினால், 30 நாட்களில் உங்கள் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்..?



