கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து பி.எம்.ஆர் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவருக்கு 39 வயதான புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தனது தந்தை வீட்டில் வசித்து வந்த இவருக்கும், இவரது உறவினரான முதனை கிராமம் மேலத்தெருவை சேர்ந்த 39 வயதான செல்வமணி என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்புலிங்கம் என்பவரின் மகனான செல்வமணி, நெய்வேலியில் உள்ள தனியார் சிட்பண்ட் நிறுவனம் ஒன்றில் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு செல்வமணி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக புவனேஸ்வரியிடம் கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல், விவாகரத்து சான்றிதழையும் புவனேஸ்வரியிடம் காட்டியுள்ளார்.
இதனை நம்பிய புவனேஸ்வரி, செல்வமணியை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, மந்தாரகுப்பம் முருகன் கோயிலில் இவர்களுக்கு திருமணம் முடிந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு செல்வமணி புவனேஸ்வரியிடம் இருந்து 30 பவுன் நகை, அவரது தந்தை சின்னதுரையிடம் ரூ.40 லட்சம் பணம், வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.50 லட்சம் பணம், ரூ.62,000 மதிப்புள்ள இருசக்கர வாகனம் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.
ஒருகட்டத்தில், செல்வமணி அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்றும், அவர் காட்டிய விவாகரத்து சான்றிதழ் போலி என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி, இது குறித்து நெய்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, செல்வமணி மீது நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் செல்வமணி புவனேஸ்வரியை ஏமாற்றிய பணம், நகைகளை மோசடி செய்தது உறுதியானது. இந்நிலையில், செல்வமணியை கைது செய்த போலீசார் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், செல்வமணி பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவை உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read: மதுரையில் கோர விபத்து… நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 5 பேர் உயிரிழப்பு!



