தமிழ் சின்னத்திரையில் ‘மைனா’-வாக அறிமுகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நந்தினி. ‘சரவணன் மீனாட்சி’ தொடங்கி ‘விக்ரம்’ திரைப்படம் வரை தனது திறமையை நிரூபித்த இவர், சமீபகாலமாக தனது வியக்கத்தக்க உடல் மாற்றத்தால் இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளார். ஒரு குழந்தைக்கு தாயான பிறகும், மிக குறுகிய காலத்தில் நந்தினியும் அவரது கணவர் யோகேஷும் இணைந்து மேற்கொண்ட உடல் எடை குறைப்புப் பயணம், பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
இன்டர்மீடென்ட் ஃபாஸ்டிங் மற்றும் டயட் முறை :
தனது எடை குறைப்பு குறித்துப் பேசிய நந்தினி, ‘இன்டர்மீடென்ட் ஃபாஸ்டிங்’ (Intermittent Fasting) எனப்படும் இடைக்கால விரத முறையையே தான் பின்பற்றியதாக தெரிவித்துள்ளார். 14:10 என்ற கால அளவைப் பின்பற்றி, இரவு உணவிற்கும் அடுத்த நாள் முதல் உணவிற்கும் இடையில் 14 மணிநேரம் இடைவெளி விட்டுள்ளார். காலையில் எழுந்ததும் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்த வெந்நீருடன் தனது நாளை தொடங்கும் இவர், காலை உணவைத் தவிர்த்துவிட்டு சத்து நிறைந்த பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளார். மதிய உணவில் குறைந்த அளவு அரிசியுடன் அதிகப்படியான காய்கறிகளையும், இரவு 8 மணிக்குள் மிக இலகுவான சூப் வகைகளையும் உணவாக கொண்டு இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்தியுள்ளார்.
உடற்பயிற்சியும் பேட்மிண்டன் விளையாட்டும் :
உணவுக் கட்டுப்பாடு மட்டுமின்றி, தீவிரமான உடற்பயிற்சிகளையும் இந்த தம்பதி தங்களது அன்றாட வாழ்வில் இணைத்துள்ளனர். தினமும் இரண்டு மணிநேரம் பேட்மிண்டன் விளையாடுவதை வழக்கமாக கொண்ட இவர்கள், ஜிம் பயிற்சிகளையும் தவறாமல் மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக, ஐந்து மாதங்களிலேயே நந்தினி 13 கிலோ வரையிலும், அவரது கணவர் யோகேஷ் சுமார் 20 கிலோ வரையிலும் எடையை குறைத்து அசத்தியுள்ளனர்.



