உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் மர்மமான முறையில் மாயமானார். இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர செல்போன் அழைப்பு விசாரணையில், அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் மாமாவே (அத்தையின் கணவர்) அவரைக் கடத்திச் சென்றது அம்பலமானது. மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தை அறிந்த மாநில மகளிர் ஆணைய துணைத் தலைவர் அபர்ணா யாதவ், பாதிக்கப்பட்ட சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிறுமி கண்ணீருடன் விவரித்த கொடுமைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், குற்றவாளி மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தற்போது அந்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு சம்பவத்தில், ஒரு தாய் தனது 6 வயது மகளை தனது மைத்துனரே (சிறுமியின் சித்தப்பா) பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக புகார் அளித்துள்ளார். 52 வயதான அந்த நபர், பிஞ்சுச் சிறுமியைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, கழுத்தை நெரித்துக் கொன்று உடலை ஆற்றில் வீசியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட போலீசார், அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பேசியுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள், “சமூகத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய உறவுகளே இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது. அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும்” என்று உறுதி அளித்துள்ளனர்.



