இன்றைய டிஜிட்டல் யுகத்தில், உலகமே இணையத்தின் பிடிக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் என எங்கு திரும்பினாலும் நெட்வொர்க் வசதி என்பது தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது. குறிப்பாக, பல வீடுகளில் அதிவேக இணையத்திற்காக வைஃபை ரூட்டர்களைப் பயன்படுத்துவது தற்போது வாடிக்கையாகிவிட்டது.
இந்த சூழலில், வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் அல்லது நண்பர்கள் வைஃபை பாஸ்வேர்டை கேட்கும்போது, சில நேரங்களில் பாதுகாப்புக் கருதியோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவோ அதனைப் பகிர நாம் தயங்குவதுண்டு. ஆனால், இனி அந்த பாஸ்வேர்டை யாரிடமும் வெளிப்படையாக சொல்லாமலேயே இணையத்தைப் பகிர முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..?
ஸ்மார்ட்போன்களில் உள்ள மேம்பட்ட வசதிகளை பயன்படுத்திப் பாஸ்வேர்டை ரகசியமாக வைக்கலாம். உங்கள் போனில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள வைஃபை செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று, அந்த இணைப்பின் பெயரை தொட்டால் ‘ஷேர்’ (Share) என்ற விருப்பம் தோன்றும். அதனைத் தேர்வு செய்தவுடன் உங்கள் திரையில் ஒரு QR கோடு உருவாகும். பாஸ்வேர்டு கேட்கும் நபரிடம் இந்த கோடை மட்டும் காட்டினால் போதும்; அவர் தனது போனில் ஸ்கேன் செய்வதன் மூலம் நேரடியாக இணையத்துடன் இணைந்து விடுவார். இதன் மூலம் பாஸ்வேர்டை எழுத்துக்களாக சொல்ல வேண்டிய அவசியமே எழாது.
உங்கள் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு குறித்து அதிக கவலைப்படுபவராக இருந்தால், வைஃபை ரூட்டரில் உள்ள ‘கெஸ்ட் நெட்வொர்க்’ (Guest Network) வசதியைப் பயன்படுத்தலாம். இந்த வசதி மூலம், உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்காக ஒரு தனி இணையப் பாதையை (Dedicated Line) உங்களால் உருவாக்க முடியும். இதன் மூலம் அவர்கள் உங்கள் பிரதான இணையப் பிணையத்திற்குள் நுழைய முடியாது. இது உங்கள் போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள தகவல்கள் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படும்.
நவீன வசதிகள் பல இருந்தாலும், உங்கள் வீட்டு வைஃபையை பகிரும்போது எப்போதும் கவனமாக இருப்பது அவசியம். அடையாளம் தெரியாத நபர்களுக்கு வைஃபை பகிரும்போது இந்த ‘கெஸ்ட் நெட்வொர்க்’ முறையை தேர்ந்தெடுப்பதே மிக சிறந்தது. இந்த சிறிய தொழில்நுட்ப மாற்றங்கள், உங்கள் பாஸ்வேர்டு ரகசியத்தை காப்பதோடு, உங்கள் வீட்டு இணையத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.



