சினிமா திரைக்கதையை மிஞ்சும் வகையிலான ஒரு வினோத சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அரங்கேறியுள்ளது. தன் கணவரின் முறையற்ற உறவால் சிதைந்து போன குடும்பத்தை மீட்டெடுக்க முடியாமல் தவித்த மனைவி, இறுதியில் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். கணவரின் காதலியிடமிருந்தே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு, தன் கணவரை அவருக்கே விற்பனை செய்துள்ள இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
மத்திய அரசுப் பணியில் இருக்கும் 42 வயது பெண் ஒருவருக்கும், 54 வயதான திருமணமான நபர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் அந்த நபரின் மனைவிக்கு தெரியவர, குடும்பத்திற்குள் தினசரி புயல் வீசத் தொடங்கியது. 16 வயது மகன் மற்றும் 12 வயது மகள் என வளர்ந்த குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவரின் இந்தப் பிடிவாதம் குழந்தைகளின் கல்வியையும். மனநலத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. பொறுத்துப் பார்த்த மனைவி, இறுதியில் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதி கேட்டுத் தஞ்சமடைந்தார்.
நீதிமன்ற ஆலோசகர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த நபர் தனது மனைவியுடன் வாழ தயாராக இல்லை. “குழந்தைகளை எனக்குப் பிடிக்கும், ஆனால் மனைவியுடன் வாழப் பிடிக்கவில்லை; காதலியுடன் தான் செல்வேன்” என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதே சமயம், விவாகரத்து வழங்க மனைவி முதலில் மறுத்து வந்தார். நீண்ட இழுபறிக்குப் பின்னர், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனைவி ஒரு நிபந்தனையை முன்வைத்தார்.
அதன்படி, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் இழப்பீடாக 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அல்லது ரொக்கம் வழங்கினால், கணவரைப் பிரிய சம்மதிப்பதாக தெரிவித்தார். வியக்கத்தக்க வகையில், அந்த நபரின் காதலி இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டார். தனது காதலனை தன்னுடன் அழைத்துச் செல்ல, ஒரு விலை உயர்ந்த பிளாட் மற்றும் தேவையான பணத்தை அந்த நபரின் மனைவிக்கு வழங்க அவர் சம்மதித்தார்.
பணத்திற்காக கணவரைத் தாரை வார்த்த மனைவி ஒருபுறம், காதலனுக்காக கோடிகளைச் செலவழித்த காதலி மறுபுறம் என இந்த விசித்திர ஒப்பந்தம் சட்ட ரீதியாகவே உறுதி செய்யப்பட்டது. முறையற்ற உறவால் ஒரு குடும்பம் பிரிந்தாலும், குழந்தைகளின் நிதிசார்ந்த எதிர்காலத்தை உறுதி செய்த இந்த சம்பவம் போபால் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



