நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த சூழலில் தமிழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று அழைப்பு விடுத்தார்.. அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தெரிவித்திருந்தன.
அதன்படி இன்று ஐயூஎம்எல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தவெக அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இன்று செய்தியாளர்களை சந்தித்த ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் இந்த தகவலை தெரிவித்தார். ஐயூஎம்எல் எம்.எல்.ஏ ஷாஜகான் அமைச்சராகிறார் என்று ஷாஜகான் பெயரை அமைச்சர் பதவிக்கு பரிந்துரைப்பது என ஐயூஎம்எல் மாநில நிர்வாகக் குழு முடிவு செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தற்போது விசிகவும் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசிக பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக வெற்றி கழக அமைச்சரவையில் பங்கேற்பது என கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் கூறினார்.
விசிக சார்பில் அமைச்சரவையில் யார் பங்கேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விசிகவின் துணைப் பொதுச்செயலாளரான வன்னியரசு, அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து களமாடி வருபவர். எனவே, சமூகப் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்தத் துறை அவருக்கு வழங்கப்பட்டால், அது தலித் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்குப் பயனுள்ளதாக இருக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.



