கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்கவும், உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியை அளிக்கவும் இயற்கை நமக்களித்த ஒரு உன்னத பானம் இளநீர். குறிப்பாக, கோடை வெயிலால் ஏற்படும் நீரிழப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை போன்ற சிக்கல்களுக்கு இளநீர் ஒரு சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், உடல் பலவீனம் ஆகியவற்றால் அவதிப்படுவோர், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இது ஒரு அருமருந்தாக அமைகிறது. செரிமான மண்டலத்தைச் சீராக்கி, சிறுநீரகச் செயல்பாட்டிற்குத் துணைநிற்கும் இளநீர், நெஞ்செரிச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற அன்றாடப் பிரச்சனைகளுக்கும் நிவராணம் அளிக்கிறது.
வெறும் வயிற்றில் இளநீர் :
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உணவியல் நிபுணர்கள் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். இரவில் உறங்கும் போது உடல் இழந்த நீர்ச்சத்தை (Hydration) மீண்டும் ஈடுகட்டவும், உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகளை உடனடியாக வழங்கவும் இது உதவுகிறது. காலையிலேயே இதைக் குடிப்பதால் வளர்சிதை மாற்றம் (Metabolism) தூண்டப்பட்டு, நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்க வழிவகை செய்கிறது. மேலும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் பணியைச் செவ்வனே செய்வதால், சருமம் பொலிவு பெறுவதோடு வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை போன்ற கோளாறுகளும் நீங்குகின்றன.
கவனிக்க வேண்டியவை :
இளநீர் ஆரோக்கியமானது என்றாலும், அதை முறையாக உட்கொள்வதே சிறந்தது. ஒரு நாளைக்கு 200 முதல் 250 மில்லி வரை, அதாவது ஒரு கிளாஸ் இளநீர் குடிப்பதே போதுமானது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது சிலருக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கடுமையான சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் (Diabetes) இளநீரைத் தங்கள் உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும்.
இளநீர் போன்ற இயற்கை பானங்களின் முழுமையான பலனைப் பெற, முறையான வாழ்க்கை முறையும் மிக அவசியம். சரியான நேரத்தில் உறங்கி எழுவது, எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மற்றும் துரித உணவுகளைத் தவிர்த்துப் பருவகாலப் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது ஆகியவை ஒட்டுமொத்த உடல் நலனை மேம்படுத்தும். வெறும் வயிற்றில் குடிக்கும் ஒரு கிளாஸ் இளநீருடன் கூடிய இந்த ஆரோக்கியமான மாற்றங்கள், உங்கள் வாழ்நாளைப் புத்துணர்வோடு நகர்த்த உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.



