ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.நில மோசடி மற்றும் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை ஆகியவை தொடர்பான வழக்குகளில் அமலாக்கத்துறை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய அவர் பதவியை ராஜினாமா செய்தார்
இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் தலைமையில் ஆட்சி அமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆளுநரிடம் அனுமதி கூறியது. இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 எம்எல்ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில் 47 எம்எல்ஏ-க்கள் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். முன்னாள் முதல்வரும் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் தனது கைது பற்றி பேசிய ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் பணம் வாங்கியது குறித்து நிரூபித்தால் அரசியலை விட்டு விலகவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கைது விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ம் தேதி இந்தியாவின் கருப்பு நாள் எனவும் தெரிவித்தார்.