சென்னை திருவல்லிக்கேணியில், முருகப்பெருமானின் ‘8ஆம் படை வீடு’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்தில் வழிபடுவது, ஒருவரது விதியையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கையாகும்.
வரலாற்றுப் பின்னணி :
மிகவும் பழமையான இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்காக, பச்சையம்மாள் என்ற பெண்மணி தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இங்கு முருகப்பெருமான் தனது தேவியர்களான வள்ளி மற்றும் தெய்வானையுடன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் உள்பிரகாரத்தில் வடக்குப் பார்த்த நிலையில் கல்யாண கனக துர்க்கையும், தெற்கு முகமாக தட்சிணாமூர்த்தியும் எழுந்தருளியுள்ளனர். மேலும், விநாயகர் மற்றும் சப்த மாதர்களுக்கான தனித்தனி சன்னதிகளும் இங்கே அமையப்பெற்றுள்ளன. ஈசானிய மூலையில் கும்பேஸ்வரரும், அக்னி மூலையில் மங்களாம்பிகையும் அருள்பாலிக்க, வாயு மூலையில் நவகிரகங்கள் மற்றும் புனித அரச மரம் பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றன.
குழந்தை வரம் மற்றும் விசேஷ வழிபாடுகள் :
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இக்கோயில் ஒரு சிறந்த பரிகார தலமாகத் திகழ்கிறது. குறிப்பாக, வைகாசி விசாகத்தன்று வரும் ‘குரு ஓரை’ நேரத்தில் கந்தசாமியை தரிசித்தால் மழலைச் செல்வம் கிட்டும் என்பது ஐதீகம். மேலும், திருப்போரூருக்கு காவடி எடுத்துச் செல்லும் முருக பக்தர்கள், வழிநெடுக தங்கிச் செல்லும் முக்கியத் தளமாகவும் இந்த ஆலயம் பல தலைமுறைகளாக விளங்கி வருகிறது.
துயரம் போக்கும் கந்தசாமி :
வாழ்க்கையில் தீராத பணப் பிரச்சனைகள், குடும்பச் சிக்கல்கள் அல்லது மனக் கவலைகளால் தவிப்பவர்கள், திருவல்லிக்கேணி கந்தசாமி கோயிலுக்கு வந்து மனமுருக வேண்டினால் நிச்சயம் ஒரு வழி பிறக்கும் என்பது பக்தர்களின் அனுபவபூர்வமான உண்மை. துன்பங்களைப் போக்கி இன்பத்தை அருளும் இந்த எட்டாம் படை வீட்டு முருகனை தரிசிப்பது, சென்னை மாநகருக்குள்ளேயே ஒரு புனிதப் பயணத்தை மேற்கொண்ட திருப்தியை தரும்.
Read More : முப்பத்து முக்கோடி தேவர்கள் பூமிக்கு வரும் நாள்..!! மாசி மகம் என்றால் என்ன..? இந்த நாளில் என்ன செய்யலாம்..?



