சமீபகாலமாக அனைவரையும் பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்சனை அதிக உடல் எடை ஆகும். உடல் எடையைக் குறைக்கப் பலர் பல்வேறு வழிகளை முயற்சிக்கின்றனர். ஆனால், நம் சமையலறையில் உள்ள ஒரு பொருளைக் கொண்டே எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்… கறிவேப்பிலை இல்லாமல் நம் சமையலில் ஒரு குழம்பையோ அல்லது உணவையோ நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கறிவேப்பிலை அதன் நறுமணம் மற்றும் சுவைக்காக மட்டுமல்லாமல், உடல்நலப் பராமரிப்பில் ஒரு சிறந்த மருந்தாகவும் செயல்படுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இதனை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
செரிமானத்தை மேம்படுத்துதல்: கறிவேப்பிலையில் உள்ள ‘கார்பசோல் ஆல்கலாய்டுகள்’ (carbazole alkaloids) செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை எளிதாக்குகின்றன. இவை உடலில் உள்ள கொழுப்பு அமிலங்களைச் சிதைத்து, தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி ஆகியவை உடலின் வளர்சிதை மாற்றத்தை (metabolism) அதிகரிக்கின்றன; இது அதிக கலோரிகளை விரைவாக எரிக்க உதவுகிறது. முறையான செரிமானமே உடல் எடையைக் குறைப்பதற்கான முதல் படி என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
ரத்த சர்க்கரை கட்டுப்பாடு: உடலில் இன்சுலின் எதிர்ப்பைக் (insulin resistance) குறைத்து, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தனித்துவமான திறன் கறிவேப்பிலைக்கு உண்டு. இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், உடல் அதிக கொழுப்பைச் சேமித்து வைக்கும். எனவே, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயைத் தவிர்க்க உதவும். மேலும், காலையில் வெறும் வயிற்றில் சில கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடுவது, உணவின் மீதான அதீத பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
நச்சுக்களை வெளியேற்றுதல்: உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் சேர்வது உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு கல்லீரல் (fatty liver) மற்றும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேருதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இந்த நச்சுக்களை வெளியேற்றவும், கொழுப்பைக் (cholesterol) குறைக்கவும் உதவுகின்றன. அதனால்தான் உணவில் கறிவேப்பிலையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், கறிவேப்பிலையில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
பயன்படுத்தும் முறை: கறிவேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, காலையில் தேநீர் போல அருந்துவது நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், உடல் எடையை விரைவாகக் குறைக்கவும் உதவுகிறது. அன்றாட குழம்பு, சட்னி மற்றும் பிற உணவுகளில் கறிவேப்பிலையைச் சேர்த்து, அவற்றை ஒதுக்கி வைக்காமல் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (anti-inflammatory properties) தோல் ஒவ்வாமை மற்றும் பிற தோல் பிரச்சனைகளையும் குறைக்கின்றன.
உடல் எடையைக் குறைக்க கறிவேப்பிலை ஒரு சிறந்த இயற்கையான வழியாக இருந்தாலும், அது மட்டுமே உடல் எடையைக் குறைக்க உதவாது. அதனுடன் முறையான ஊட்டச்சத்து மற்றும் வழக்கமான உடற்பயிற்சியும் அவசியம். கறிவேப்பிலையை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள், மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே இந்த வழக்கத்தைத் தொடங்க வேண்டும்.
Read More : இந்த அறிகுறிகள் இருந்தால், உடனே பரிசோதனை செய்துகொள்ளுங்கள்..! மார்பகப் புற்றுநோயாக இருக்கலாம்..!



