மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை சுற்றி இத்தனை ஆண்டுகாலமாகப் பின்னப்பட்டிருந்த மர்ம முடிச்சுகளுக்கு விடையளிக்கும் வகையில், கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா மனம் திறந்துப் பேசியுள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் கழித்த அந்த 75 நாட்களின் உண்மையான பின்னணி குறித்து அவர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழாவின் போதே அவர் கடும் உடல் உபாதைகளுடன் இருந்ததாக சசிகலா கூறியுள்ளார். நடக்கக்கூட முடியாத நிலையில் அந்த அரசு விழாவில் பங்கேற்ற ஜெயலலிதாவை தொடர்ந்து கவனித்து வந்ததாகவும், சிகிச்சையின் இறுதியில் அவர் குணமடைந்து வீடு திரும்பத் தயாராக இருந்த தருணத்தில்தான் விதி மாரடைப்பு வடிவில் வந்ததாகவும் அவர் கூறினார்.
மருத்துவர்களின் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகும் அவரை மீட்க முடியாமல் போனது ஒரு பேரிழப்பு என தெரிவித்த அவர், இந்தச் சோகத்தை தனது அரசியல் எதிரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தன் மீது பழி சுமத்தியதாக கூறினார். தன்னைப் பெங்களூரு சிறையிலிருந்து சென்னைக்கு மாற்ற அப்போதைய அமைச்சர்கள் சிலர் முயன்றதாக குறிப்பிட்ட சசிகலா, அந்தச் சதித்திட்டத்திற்குத் தான் உடன்படவில்லை என்று கூறினார்.
“அன்று மட்டும் நான் அவர்களின் பேச்சைக் கேட்டு சென்னைக்கு வந்திருந்தால், இன்று உங்களுடன் பேச நான் உயிரோடு இருந்திருப்பேனா என்பதே சந்தேகம்” என்று அவர் கூறியுள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைக்கவே இத்தனை காலம் அமைதி காத்ததாகவும், உண்மை ஒருநாள் வெல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, அதில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், சசிகலா பொதுமேடையில் வழங்கியுள்ள இந்த நேரடி விளக்கம், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் மீண்டும் ஒரு விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.



