சென்னை புரசைவாக்கத்தில், ஒரு குடும்பமே கூட்டு சேர்ந்து அரங்கேற்றிய ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) பாணி மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணக்கார குடும்பத்துப் பெண்களை குறிவைத்து, பாசம் மற்றும் காதல் வலையில் வீழ்த்தி, நகைகளைப் பறித்ததோடு ஆபாசப் படங்களை எடுத்து மிரட்டிய தாய் மற்றும் அவரது இரு மகன்களின் கொடூர முகம் தற்போது அம்பலமாகியுள்ளது.
வேப்பேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாடகைக்கு குடியேறிய சங்கீதா (54) மற்றும் அவரது மகன்களான திலீப் (33), அங்கித் (31) ஆகியோர், அந்தப் பகுதியில் வசிக்கும் வசதியான பெண்களை முதலில் அடையாளம் காண்பார்கள். தாய் சங்கீதா, அக்கம் பக்கத்துப் பெண்களிடம் மிகுந்த அன்போடும், பாசத்தோடும் பழகி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவார். அந்தப் பெண்கள் இவர்களது குடும்பத்தில் ஒருவராக மாறியவுடன், மூத்த மகன் திலீப் தனது ‘காதல்’ தூண்டிலை வீசுவார். இவர்களின் திட்டமிட்ட நாடகத்தில் சிக்கி, ஒரு தொழிலதிபரின் மனைவி தனது நகை மற்றும் மானத்தை இழந்து தவித்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புரசைவாக்கத்தை சேர்ந்த அந்தப் பெண்ணிடம் நெருக்கமான திலீப், ஒருகட்டத்தில் அவரைத் தனது காமவலைக்கும் அடிபணிய வைத்துள்ளார். பின்னர், தங்கள் குடும்பத்தின் கோடிக்கணக்கான பணம் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளதாக பொய்யான கதையை கூறி, சுமார் 1 கிலோ தங்கம், வைர நகைகள் மற்றும் 2.5 கிலோ வெள்ளிப் பொருட்களைப் பறித்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து ரொக்கப் பணத்தையும் கறந்துள்ளனர். ஒருகட்டத்தில் நகைகளை தர மறுத்த அந்தப் பெண்ணை, திலீப்புடன் நெருக்கமாக இருந்த ஆபாசப் படங்களைக் காட்டி தாய் சங்கீதாவே மிரட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர் மிரட்டலால் மனமுடைந்த அந்தப் பெண், தனது கணவரிடம் உண்மையைக்கூறி அழுததை தொடர்ந்து, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்ற குற்றப்பிரிவு போலீசார், உடனடியாகச் செயல்பட்டுத் தாய் சங்கீதா மற்றும் இளைய மகன் அங்கித் ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து பல செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடியின் முக்கிய மூளையாகச் செயல்பட்ட திலீப், கொள்ளையடித்த நகை மற்றும் வைரங்களுடன் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குத் தப்பியோடியுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள திலீப்பைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
Read More : அரசுப் பேருந்துகளில் இனி பாடல்கள் ஒலிக்க தடை..!! போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு..!!



