தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தல் பரீட்சையை சந்திக்க தயாராகி வரும் வேளையில், வேட்பாளர் தேர்வு தொடர்பான அதிரடி தகவல்கள் கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளன. தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் ஆர்வம் காட்டி விருப்ப மனுக்களை குவித்துள்ள நிலையில், எவ்வித நேர்காணலும் இன்றி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட தலைமை முடிவெடுத்துள்ளதாக கசிந்துள்ள செய்தி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தலைவர் விஜய், வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி சுமார் 80 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக மற்ற கட்சிகளில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி, அதன் பின்னரே வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், தவெக-வில் மாவட்ட செயலாளர்களிடம் பெறப்பட்ட ரகசிய பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திடீர் நகர்வு, நேர்காணல் நடக்கும் என நம்பிக் காத்திருந்த பல நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
கட்சியின் இந்த ரகசிய வியூகத்தால், பெருந்தொகை செலுத்தி விருப்ப மனு அளித்த இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி விசுவாசிகள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். “தகுதியானவர்களை நேரில் அழைத்து விசாரிக்காமல், மாவட்ட செயலாளர்களின் பரிந்துரைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது எந்த வகையில் நியாயம்?” என்ற கேள்வி கட்சிக்குள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தங்களுக்குச் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் களப்பணிகளைத் தொடங்கியிருந்த பல மாவட்ட நிர்வாகிகள், தலைமையின் இந்தத் தன்னிச்சையான முடிவால் தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து கவலையில் உள்ளனர்.
Read More : புஸ்ஸி ஆனந்த் vs ஜான் ஆரோக்கியசாமி..!! திடீரென வெடித்த மோதல்..!! விஜய்க்கு பெரும் தலைவலி..!!



