தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, அதிமுகவின் முன்னாள் முதலமைச்சரும், அந்த இயக்கத்தின் ஒரு காலத்து அச்சாணியுமான ஓ.பன்னீர்செல்வம், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஒரு நபர், தனது அரசியல் வாழ்வின் பரம எதிரியாக கருதிய திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய விசுவாசிகளான மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவின் கரைவேட்டியை தரித்துக்கொண்ட நிலையில், தற்போது மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான ஐயப்பனுடன் ஓ.பன்னீர்செல்வமும் அண்ணா அறிவாலயத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஒரு முன்னாள் முதலமைச்சரே மாற்று முகாமுக்கு செல்வது என்பது இந்திய அரசியலிலேயே அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இவருடன் இவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஓ.ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்துள்ளார்.
திமுக வட்டாரங்களில் கசியும் தகவல்களின்படி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு அக்கட்சியில் ‘துணைப் பொதுச்செயலாளர்’ பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதோடு, திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில், அவருக்கு சபாநாயகர் போன்ற ஒரு கௌரவமான மற்றும் அதிகாரமிக்க பதவியை வழங்க தலைமை ஆலோசித்து வருவதாகப் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
ஓபிஎஸ்-க்கு சபாநாயகர் பதவி என்ற பேச்சு எழுந்தவுடனேயே, தற்போதைய சபாநாயகர் அப்பாவுவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ராதாபுரம் தொகுதியில் திமுக தலைமை அண்மையில் நடத்திய கள ஆய்வில், அப்பாவுவின் செயல்பாடுகள் குறித்து உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் அதிருப்தி நிலவுவது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு புகார்கள் அவர் மீது அடுக்கப்பட்டுள்ளதால், வரும் தேர்தலில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதே சந்தேகம்தான் என அறிவாலய குரல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஓபிஎஸ்-ஸின் வருகை திமுகவிற்குள் ஒரு புதிய அதிகாரப் பகிர்வை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



