சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை, இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என அறிவித்தார். விஜய்யின் இந்த அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டத்தில் விஜய் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.
சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்ற நிலையில், அதற்கு இப்போது முதலே படிப்படியாக ஆயத்தமாவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.