தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே மக்கள் மத்தியில் அனலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளும் மீண்டும் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி அஸ்திரத்தை கையில் எடுக்கக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் பெறுவதற்காக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.
தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன்களையும், விவசாய கடன்களையும் ரத்து செய்யும் என்ற நம்பிக்கையில், கடந்த சில நாட்களாக கூட்டுறவு மையங்களில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இதனால் வழக்கத்தை விட கூடுதல் பணிச்சுமையுடன் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் திணறி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் கடன் வாங்கினால் தள்ளுபடி கிடைத்துவிடும் என்ற மனநிலை சாமானிய மக்களிடையே நிலவுவதே இந்த கூட்டத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
மறுபுறம், இத்தகைய தொடர் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் மாநிலத்தின் நிதிநிலைக்கும், கூட்டுறவு அமைப்புகளின் கட்டமைப்புக்கும் பெரும் சவாலாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கூட்டுறவு வங்கிகளின் நிதி ஆதாரம் என்பது சுழற்சி முறையிலான திருப்பிச் செலுத்தலை நம்பியே உள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்படும்போது, அந்த நிதிச் சுமையை அரசு ஈடுகட்ட தவறினால் அல்லது காலதாமதம் செய்தால், கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடே முடங்கும் அபாயம் உள்ளது.
முந்தைய அனுபவங்களை கருத்தில் கொண்டு, இந்த முறை நகைக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டாலும், அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு குடும்பத்திற்கு இத்தனை கிராம் தங்கம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்ற உச்சவரம்பு, வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை போன்ற நடைமுறை சிக்கல்கள் எழக்கூடும். எனவே, புதிய கடன்களை வாங்குவதற்கு முன்பாக, தள்ளுபடி விதிகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கவனிப்பது அவசியம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
Read More : கரைந்து போகும் ஓபிஎஸ் அணி..? மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கியப் புள்ளி..!! எடப்பாடி பழனிசாமி குஷி..!!



