மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வரும் நிலையில், இந்தியா தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை என்றும், அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய பாடுபடுகிறது என்றும் கூறினார்.
புதன்கிழமை கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இந்த கருத்தை கூறினார். தற்போதைய சூழலில் இந்தியா வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களை சிக்கலில் விடாமல் பாதுகாக்கும் நாடாக மாறியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மேற்கு ஆசியா முழுவதும் வசித்து வேலை செய்து வரும் இந்தியர்களின் நிலைமையை இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும், அங்குள்ள இந்திய தூதரகங்கள் இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன என்றும் பிரதமர் கூறினார்.
இந்த நேரத்தில் வளைகுடா நாடுகள் இந்தியர்களை கவனமாக பாதுகாத்து வருவதாகவும், அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். “அங்கு பணியாற்றும் இந்தியர்களுக்கு வளைகுடா நாடுகள் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. அதற்காக அவர்களுக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், மேற்கு ஆசியா பிரச்சினையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாகக் கூறி காங்கிரஸ் கட்சியை பிரதமர் விமர்சித்தார். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதால் மேற்கு ஆசியாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை ஈரான் பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் மற்றும் பல வளைகுடா அரபு நாடுகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் பல பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடக்கப்போகிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஏர்ரெய்டு சைரன்கள் ஒலித்தன. எனினும் உடனடி உயிரிழப்பு குறித்து தகவல் வெளியாகவில்லை.
சவுதி அரேபியாவிலும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தை நோக்கி வந்த ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வான்பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்தன. மேலும் கிழக்கு பகுதியில் உள்ள Hafar al-Batin நகரத்தின் மேல் பறந்த இரண்டு ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
கடல் பகுதிகளிலும் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Strait of Hormuz அருகே ஓமான் வடபகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றை ஏவுகணை போன்ற பொருள் தாக்கியதால் அந்த கப்பலில் தீப்பற்றியது என்று பிரிட்டன் ராணுவம் இயக்கும் கடல்சார் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே ஐக்கிய அரசு அமீரகம் அருகே சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் கப்பல் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் பாரசீக வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த மற்றொரு கப்பலையும் ஏவுகணை போன்ற பொருள் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
ஐக்கிய அரச்பு, அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, புதன்கிழமை அதிகாலை ஈரானிலிருந்து வந்த தாக்குதல்களை தங்கள் வான்பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து வந்தன. இதற்கு முன்பு நடந்த தாக்குதல்களில் 6 பேர் உயிரிழந்ததுடன் 122 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பஹ்ரைன் நாட்டிலும் ஈரான் தாக்குதல் வருவதாக எச்சரிக்கை கிடைத்ததால் அவசர எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன. அதற்கு முந்தைய நாளில் தலைநகரான மனாமா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றை தாக்கியதில் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



