‘ஸ்பைஸ்ஜெட்’ விமான நிறுவனம் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 9,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 30 விமானங்கள் இயக்கத்தில் உள்ளன. இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீதமாகும். இந்த நடவடிக்கையானது செயல்பாட்டு செலவுகளைக் குறைப்பதற்காகவும், நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை தக்க வைத்துக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இது செயல்பாட்டு தேவைகளுக்கு மாறாக நிறுவன அளவிலான செலவுகளின் சீரமைப்பை உறுதி செய்வதாகும். பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் பணியாளர்களுக்கு வழங்கும் பணி துவங்கப்பட்டுவிட்டது” என்றார். இந்நிறுவனம் பல மாதங்களாக தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை தாமதமாக வழங்கி வருகிறது. பல ஊழியர்களுக்கு இன்னும் ஜனவரி மாத ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், ரூ.2,200 கோடி நிதி திரட்டுவதற்கான செயல்பாட்டில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.