தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்.. 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்..
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் – இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.. சம்பவம் நடந்தது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.. மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்..
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் சிபிஐ 2427 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனிடையே வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் மார்ச் 23- தேதி தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் சம்பவத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. அப்போது தந்தைக்கும், மகனுக்கும் காவலர்களால் தான் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகி உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.. கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட போதே தந்தை, மகன் இருவருக்கும் உடலில் காயங்கள் இருந்துள்ளது எனவும் நீதிபதி குறிப்பிட்டார்..
மேலும் “ பென்னிக்ஸை இரவு முழுவதும் 10 நிமிடம் இடைவெளி விட்டுவிட்டு 200 முறைக்கு மேல் காவலர்கள் தாக்கி உள்ளனர்.. ஆய்வாளர் ஸ்ரீர்தர் அடிக்கச் சொன்னதால் தான் தந்தை ஜெயராஜ்,அ மகன் பென்னிக்ஸை காவலர்கள் தாக்கி உள்ளனர்.. தந்தை, மகன் இருவரையும் கைகளை கட்டி தொங்கவிட்டும், டேபிளில் படுக்க வைத்தும் காவலர்கள் தாக்கி உள்ளனர்.. நாம் அடித்து பழக அப்பா, மகன் கிடைத்துள்ளனர், இவர்களை அடித்து பயிற்சி எடுத்துக் கொள்வோம் என காவலர்கள் பேசி உள்ளனர்.. தந்தை மகன் உடலில் இருந்த காயங்கள் மரணம் விளைவிக்க கூடிய காயங்கள் என்பது கூராய்வு முடிவு தெரியவந்துள்ளது..” என்று தெரிவித்தார்..
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.. வரும் திங்கள்கிழமை அன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்..
Read More : பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11.. NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..!



