தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் திருவிக நகரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட இருக்கிறார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உயிருக்கு ஆபத்து இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தேர்தலில் போட்டியிடுவது நல்ல முடிவு.
பொற்கொடிக்கு அரசியல் பிரதி நிதித்துவம் வழங்கும் வகையில் திருவிக நகரில் அதிமுக வாய்ப்பு கொடுத்துள்ளது வரவேற்க்கத்தது. ஆனால் திருவிக நகரில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து உள்ளது. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது போலீசாரின் கடமை எனக் கூறினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு நாளில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை அவரது மனைவி பொற்கொடி தொடங்கினார். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



