டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் அருகே ஒரு தற்காலிக கட்டுமானம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில், 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் கேட் எண்-2 அருகே இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தற்காலிக கட்டுமானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இந்த கட்டுமானம் எதிர்பாராதவிதமாக இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
பல தொழிலாளர்கள் மதிய உணவுக்கு சென்றிருந்ததால், இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர். எனினும் மேலும் சில தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.