மத்திய கிழக்கு பகுதிகளில் நீடித்து வரும் போர் நிலைமை, உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது. இதன் தாக்கமாக, கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்த செலவு உயர்வின் விளைவாக, கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் புதிய விலைப் பட்டியல் அமலுக்கு வந்துள்ளது.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து சிமென்ட் தயாரிப்பிற்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அங்கு நீடித்து வரும் போர் நிலைமையால் கடல் மார்க்க கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளன. இதன் நேரடி தாக்கமாக, ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ. 50 முதல் ரூ. 70 வரை உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், உலோக உற்பத்திக்கான எரிபொருள் செலவு மற்றும் மின்சாரக் கட்டண உயர்வைக் காரணமாகக் காட்டி, கம்பி (steel rods) தயாரிப்பு நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன. ஒரு டன் கட்டுமானக் கம்பியின் விலை ரூ. 2,000 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. போர் காரணமாக சர்வதேச அளவில் நிலக்கரி மற்றும் பிற எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என உற்பத்தியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சிமென்ட் மற்றும் கட்டுமானக் கம்பி விலை திடீரென உயர்ந்துள்ளதால், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட பல கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிற்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் மற்றும் கம்பி விலை ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளதால், ஒரு சதுர அடி கட்டுமானச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது எனப் பொறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Read more: அமெரிக்காவை அச்சுறுத்தும் சிகாடா வைரஸ்.. இது எவ்வளவு ஆபத்தானது? அறிகுறிகள் என்னென்ன..?



