தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி இதுவரை தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லை.
சமீபத்தில் கேரளா மற்றும் புதுச்சேரியில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, தமிழகம் வராதது திமுக தலைமையிலும் தொண்டர்களிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இடையே நீண்டநாள் நெருக்கமான உறவு இருந்து வந்தாலும், இந்த முறை அவர் தமிழகத்தை புறக்கணிக்கிறாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கொங்கு மண்டலம் மற்றும் கன்னியாகுமரி போன்ற காங்கிரஸ் பலம் வாய்ந்த பகுதிகளில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என திமுக தரப்பு கருதுகிறது. அதேபோல், திருச்சியில் ஸ்டாலின் – ராகுல் ஒரே மேடையில் தோன்றினால் மாநிலம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் யாரும் இதுவரை தமிழகம் வராதது திமுக கூட்டணிக்குள் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், அவர் தமிழகத்தை புறக்கணிக்கவில்லை என்றும், வட மாநில அரசியல் சூழ்நிலைகளில் கவனம் செலுத்துவதால் மட்டுமே இந்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் அவர் தமிழகத்திற்கு வந்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நெல்லை கேடிசி நகர் பகுதியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய், உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் உள்ளது. சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை ஸ்டாலின் சார் கையில் போட்டுக்கொண்டார் எனக் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: தர்பூசணியை இப்படித்தான் சாப்பிடுகிறீர்களா..? மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சியூட்டும் உண்மைகள்..!



