தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி “ கருணாநிதியின் இறுதி காலத்தில் ஸ்டாலின் அவரை கைதியாக தான் வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றி விட்டார் என ஒரு ஆடியோவில் தகவல் வந்தது..” என்று பேசியிருந்தார்..
எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று பதிலடி கொடுத்தார்.. நெல்லையில் பிரச்சாரம் செய்த அவர் “ கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்திருந்ததாக எடப்பாடி பழனிசாமி நாக்கில் நரம்பில்லாமல் பொய் பேசுகிறார் என்று பதில் அளித்து இருந்தார்..
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிசாமி நஞ்சை கக்கி உள்ளார். கலைஞர் உடல்நலமில்லாத காலத்தில் கண்ணை இமை காப்பது போல மு.க ஸ்டாலின் காத்து வந்தார்.. கலைஞர் மறைந்த போது அண்ணா நினைவிட அருகேயே நல்லடக்கம் செய்ய துடியாய் துடித்தார் ஸ்டாலின். உள்ளம் உருக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தும் மனிதாபானம் இன்றி உதாசீனப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.
அண்ணா நினைவிடம் அருகே கலைஞரை நல்லடக்கம் செய்யும் தீர்ப்பை பெற்று நெஞ்சுருகி கதறினார் ஸ்டாலின். கல்லினும் கொடிய மனம் கொண்ட பழனிசாமி இனி அவதூறு கருத்துகளை கூறக்கூடாது.. அவதூறு கருத்துகளை எடப்பாடி பழனிசாமி கூறுவாரானால் அரசியல் களத்திலிருந்தே ஓட நேரிடும்.” என்று தெரிவித்துள்ளார்..



