கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 52 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. நீண்டகாலமாக பெண்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த திட்டத்தை ஆய்வு செய்ய பேராசிரியை சப்னா கிறிஸ்ட் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் (மாதத்திற்கு ஒரு நாள்) சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு உத்தரவு வெளியிட்டது.
ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக பெங்களூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகின. இதனால், கர்நாடக உயர்நீதிமன்றம் முதலில் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், வழக்கை மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்றம், “மாதவிடாய் விடுப்பு என்பது பெண்களின் உடல்நலம் தொடர்புடைய அடிப்படை உரிமை” என்று வலியுறுத்தியது.
மேலும், மாதவிடாய் விடுப்பு தொடர்பான சட்டம் அதிகாரப்பூர்வமாக இயற்றப்படும் வரை, பதிவு செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த கொள்கையை “கண்டிப்பாகவும் உண்மையாகவும்” செயல்படுத்த வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில், கர்நாடக அரசு இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மாணவிகளுக்கும் மாதத்திற்கு ஒரு நாள் வீதம் ஆண்டுக்கு 12 நாட்கள் விடுப்பு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தீர்ப்பு, பெண்களின் உடல்நல உரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்ற சூழல் உருவாக்குவதற்கும், அவர்களின் நலன்களை பாதுகாக்கவும் இந்த முடிவு உதவும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



