விமானப் பணிப்பெண்களுக்கான ஒப்பனை விதிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான ஆவணம் ஒன்றைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. “விமானப் பணிக்குழு கொள்கை” எனக் கூறப்பட்ட அந்த ஆவணத்தில், பெண் பணியாளர்கள் பொட்டு, சிந்துரம், திலகம் போன்ற மதச் சின்னங்களை வெளிப்படையாக அணியக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. பலர், இது பணியிடத்தில் தனிநபர் சுதந்திரத்தையும் கலாச்சார அடையாளத்தையும் கட்டுப்படுத்தும் முயற்சி எனக் குற்றம்சாட்டினர். மற்றொரு தரப்பு, சர்வதேச தரத்திற்கேற்ப ஒரே மாதிரியான தொழில்முறை தோற்றத்தை உருவாக்குவதற்காக விமான நிறுவனங்கள் இப்படியான விதிகளை கடைப்பிடிப்பது இயல்பு என ஆதரவு தெரிவித்தனர்.
வைரலான ஸ்கிரீன்ஷாட்கள் மூலம் இந்த விவாதம் விரைவாக பரவிய நிலையில், பணியாளர் கொள்கைகள், மத அடையாளம், நிறுவன ஒழுங்கு ஆகியவை குறித்து பரந்த அளவில் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, “பிராண்ட் இமேஜ் முக்கியமா அல்லது தனிநபர் அடையாளமா?” என்ற கேள்வி மீண்டும் முன்வந்துள்ளது.
இதற்கிடையில், ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் ஊழியர்கள் பொட்டு வைத்துக்கொள்ளும் உரிமை உண்டு. இணையத்தில் பரவி வரும் படங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டவை” எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் விளக்கத்துக்குப் பிறகும், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
Read more: தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தவோ, நிற்கவோ கூடாது.. உச்ச நீதிமன்றம் அதிரடி..!



