விருதுநகர் மாவட்டம் கட்டுனார் பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டது. தகவல் அறிந்து உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளர்கள் சிலர் ஆலைக்கு உள்ளே சிக்கி இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையின் 4 கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளது. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்..
இந்த நிலையில் விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் ” தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்..



