தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் உற்சாகமாக வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர். மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் பலரும் கூட தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்து வாக்களிக்க உள்ளனர். இந்த சூழலில், தேர்தல் ஆணையம் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தேர்தல் நாளை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் தேவையான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றது… வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும், வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
முக்கியமாக, வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் மொபைல்கள் பாதுகாப்பாக வைக்க தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொபைல் மட்டுமின்றி கேமரா, ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களையும் உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வாக்குச்சாவடிக்குள் புகைப்படம் எடுக்கவோ அல்லது வீடியோ பதிவு செய்யவோ கூடாது. இந்த விதியை மீறினால், மூன்று மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
சிலர் வாக்களித்ததை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர விரும்புவது வழக்கம். ஆனால், வாக்கு ரகசியத்தை பாதுகாப்பதற்காக இப்படியான செயல்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் அமைதியாக நடைபெற மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை மற்றும் ஆயுதப்படையினர் பெருமளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக காவல்துறை மற்றும் ஆயுதப்படை இணைந்து மொத்தம் 1.47 லட்சம் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கூடுதலாக, 300 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் 5,455 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததால், இனிமேல் நேரடி பிரச்சாரத்திற்கும், சமூக வலைதளங்களில் தேர்தல் தொடர்பான பதிவுகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலர் இதை மீறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..



