தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெறும் 5 நபர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப்ரல் 23ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. அதே நேரத்தில், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் அதிமுகவும் வலுவான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோஷத்துடன் நாம் தமிழர் கட்சியும், புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெகவும் மக்களிடம் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டது.
கடுமையான கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கடந்த 20 நாட்களாக அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சாரம் கடந்த 21-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
போட்டியில் உள்ள வேட்பாளர்கள் – விவரம்
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில்: 3579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.
மொத்த வாக்காளர்கள்:
5.73 கோடி பேர் பெண்கள்
7,728 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்
வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்கு சதவீதம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பழைய வாக்காளர்கள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்பதால், இந்த முறை வாக்கு சதவீதம் 85% ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் சாதனங்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு அறைகள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஒரு வாக்குப்பதிவு மையம் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை வனப்பகுதியில் வசிக்கும் மிக குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்காக, தனிப்பட்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிமலை பகுதியில் மொத்தம் 5 பேர் மட்டுமே வாக்காளர்களாக உள்ளனர். இருப்பினும், அவர்களின் ஜனநாயக உரிமையை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் தனியே வாக்குச்சாவடியை அமைத்துள்ளது. மக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கும் உரிமை சமமாக வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடியை அமைப்பது சுலபமான காரியம் அல்ல. அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான மலைப்பாதைகள் வழியாக தேர்தல் அதிகாரிகள் பயணம் மேற்கொண்டனர். சுமார் 75 கிலோமீட்டர் தூரம் கடந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்களை அவர்கள் அந்தப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் கடுமையாக செய்யப்பட்டிருந்தன. போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு, வாக்குப்பதிவு மையம் பாதுகாப்பாக அமைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த வனப்பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த முடியும்.
இவ்வாறான ஏற்பாடுகள், இந்திய தேர்தல் அமைப்பின் வலிமையையும், ஜனநாயகத்தின் ஆழத்தையும் வெளிப்படுத்துகின்றன. மிகத் தொலைதூர பகுதிகளிலும் வாழும் மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படுவது, நாட்டின் தேர்தல் செயல்முறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.



