திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளி தனது 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த நாங்குநேரி மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி சுரேஷ்குமார், 7 மாத கால தொடர் விசாரணைக்குப் பிறகு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ரூ. 25,000 அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக குற்றவாளி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்தது. மரண தண்டனை என்பது மிக அபூர்வமான சூழ்நிலைகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அதன் அடிப்படையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதே பொருத்தமானது என நீதிமன்றம் தீர்பளித்தது. முன்கூட்டியே விடுதலை, தண்டனை குறைப்பு அல்லது மாற்றம் போன்ற எந்த சலுகைக்கும் தகுதி இல்லை என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
Read more: UPI பேமெண்ட்களுக்கு PIN எண் தேவையில்லை; கைரேகை மூலமாகவும் மேற்கொள்ளலாம்..!



