இந்தியாவில் பாலின சமநிலையை நோக்கி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதம் உயர்ந்துள்ளதே இந்த மாற்றத்திற்கான முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கையை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தயாரித்துள்ளது. பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அரசு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த வெளியீடு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, 2017–19 காலகட்டத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 904 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2021–23 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 917 ஆக உயர்ந்துள்ளது. இது பெண் குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதம் மேம்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார சேவைகள் வலுப்பெற்றுள்ளதாகவும் காட்டுகிறது.
மேலும், 2008 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண் சிசுக்களின் மரண விகிதம் தொடர்ந்து குறைந்து வந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இது இந்தியாவில் சுகாதார துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் முக்கிய குறிகாட்டியாக கருதப்படுகிறது.
கல்வித்துறையிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். 2021–22ல் பெண்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 28.5 இருந்த நிலையில், 2022–23ல் அது 30.2 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஆண்களின் சேர்க்கை விகிதம் 28.3 இருந்து 28.9 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கல்வியில் பெண்கள் வேகமாக முன்னேறி வருவது தெளிவாகிறது.
வேலைவாய்ப்பிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்டோரின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் இரு பாலினரிலும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற பெண்களின் பங்கேற்பு 37.5 சதவீதத்திலிருந்து 45.9 சதவீதமாக உயர்ந்து, கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மேலாண்மை நிலைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். 2017 முதல் 2025 வரை மேலாண்மை பதவிகளில் ஈடுபட்ட ஆண்களின் எண்ணிக்கை 73.80 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், பெண்களின் எண்ணிக்கை 102.54 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நிர்வாக மற்றும் முடிவெடுக்கும் நிலைகளில் பெண்களின் பங்கு வலுவடைந்துவருவதை காட்டுகிறது.
இந்த வெளியீடு மக்கள்தொகை, கல்வி, சுகாதாரம், பொருளாதார பங்கேற்பு, முடிவெடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாலின அடிப்படையிலான தரவுகளை தொகுத்து வழங்குகிறது. மேலும், 50 முக்கிய குறிகாட்டிகளுக்கான வரையறைகள், மூலங்கள் மற்றும் விளக்கங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில், இந்த அறிக்கை இந்தியாவில் பாலின சமநிலைக்கு நோக்கி நிலையான முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை வெளிப்படுத்துகிறது. பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நிலை உயர்வுடன், சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் பாதையில் நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது.



