நடிகர் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம், தற்போது வெளியீட்டிற்கு முக்கியமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ள நிலையில், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் பணிகள் 2017ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் படம் தொடர்ந்து தள்ளிப்போனது. குறிப்பாக, 2023 நவம்பர் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியீட்டுக்கு முன்பே மீண்டும் தள்ளிவைக்கப்பட்டதாக இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மதன் மற்றும் கவுதம் மேனன் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தைச் சுற்றிய நிதி பிரச்சினை காரணமாக, தயாரிப்பாளர் மதன் தனது 50% உரிமையை புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகியோருக்கு வழங்கியிருந்தார்.
இதையடுத்து, தங்களுக்கு வரவேண்டிய தொகை வழங்கப்படவில்லை என கூறி, புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், 2023ஆம் ஆண்டு பட வெளியீடு தடை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜூன் 15ஆம் தேதிக்குள் படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட தேதிக்குள் வெளியிட முடியாவிட்டால், கால அவகாசம் கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், படத்துடன் தொடர்புடைய அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்றும், அந்த கணக்கில் செலுத்தப்படும் மற்றும் வெளியேறும் தொகைகளை கண்காணிக்க வழக்கறிஞர் ஒருவரை கண்காணிப்பாளராக நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், அந்த வங்கிக் கணக்கிலிருந்து தயாரிப்பு நிறுவன பங்குதாரர்களுக்கு ஊதியம் அல்லது பங்குத்தொகை வழங்க வேண்டுமெனில், நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கு தொடங்குவதில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், பட வெளியீட்டில் எந்தவித தடையும் ஏற்படுத்தக் கூடாது என மனுதாரர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more: தலைக்கேறிய போதை.. மனைவியை கொன்று கடற்கரையில் புதைத்த கணவன்..! பகீர் பின்னணி..



