Raadhika Sarathkumar: விருது நகர் தொகுதியில், நடிகை ராதிகா சரத்குமார் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை திமுக, அதிமுக, பாஜக என மூன்று கட்சிகளும் தங்களுடைய தலைமையில் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்திருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத்திருந்த அறிக்கையில், “பாஜகவின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப்ரவரி 28-ம் தேதி என்னை நேரில் சந்தித்து, மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு மக்களவைத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்தது. அதன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார் சரத்குமார்.
பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்த நிலையில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திமுகவை பொறுத்தவரை விருதுநகர் தொகுதியில் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: DMK : ஓரிரு நாளில் நல்ல செய்தி வரும்..! தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு..!