நீங்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குபவராக இருந்தால், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். தலைமை நீதிபதி சூர்ய காந்த் வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான்பூச்சிகள்” என ஒப்பிட்டதாக கூறப்பட்ட கருத்தைத் தொடர்ந்து, இணையத்தில் உருவான இந்த நையாண்டி இயக்கம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இயக்கத்தை டிஜிட்டல் வர்ணனையாளர் அபிஜீத் திப்கே தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு நையாண்டி குழுவாக தொடங்கிய இது, சில நாட்களிலேயே மில்லியன் கணக்கான பின்தொடர்பாளர்களை ஈர்த்து, இணைய அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது. குறிப்பாக 3 நாட்களில் மட்டும் 8.8 மில்லியன் ஃபாலோவர்களை கடந்துள்ளது.
இந்த இயக்கம் வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக சமூக ஊடகங்களில் உருவான இளைஞர் ஆதரவு. குறிப்பாக ஜென் Z தலைமுறை, வேலையின்மை, சமூக அழுத்தம் மற்றும் அரசியல் மீதான அதிருப்தியை நையாண்டி வடிவில் வெளிப்படுத்தும் ஒரு மேடையாக இதைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சினிமா மற்றும் சமூக ஊடக உலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் இந்த இயக்கத்தை பின்தொடர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகைகள் கொங்கனா சென் ஷர்மா, பாத்திமா சனா ஷேக், இஷா குப்தா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் தொலைக்காட்சி மற்றும் இணைய பிரபலங்களும் இதில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த குழு தன்னை “மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சோம்பேறித்தனமான” இயக்கம் என கிண்டலாக விவரித்துள்ளது. தலைமை நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பிந்தைய மாநிலங்களவை இடங்கள் வழங்குவதை தடைசெய்ய வேண்டும், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, கட்சி தாவும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு கடுமையான தடை உள்ளிட்ட சில நையாண்டி கோரிக்கைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மொத்தத்தில், ஒரு சமூக ஊடக சர்ச்சையில் இருந்து தொடங்கிய இந்த நையாண்டி இயக்கம், இன்று இந்திய இணைய அரசியல் கலாச்சாரத்தில் இளைஞர்களின் குரலாகவும், டிஜிட்டல் எதிர்ப்பின் புதிய வடிவமாகவும் உருவெடுத்துள்ளது.



