ஒரு மனைவி தன் கணவரை “ஆண்மையற்றவர்” என்று கூறுவது, அவரது கூற்றுகளுக்கு மருத்துவச் சான்றுகள் இருக்கும் பட்சத்தில் அவதூறு ஆகாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
நீதிபதி அச்சால் சச்தேவ் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு, “ அந்த பெண், அந்த கூற்றை நன்னம்பிக்கையுடனும் மற்றும் தன் கணவர் மீது எந்தவிதமான தீய எண்ணமும் இன்றியும் தெரிவித்ததாகக் கூறியது. மேலும், விசாரணை நீதிமன்றம் வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் முறையாக ஆராயாமல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன், அப்பெண்ணின் கூற்று அவரது கணவரின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) அவதூறு தொடர்பான பிரிவு 500-இன் கீழ், கோரக்பூர் கூடுதல் உரிமையியல் நீதிபதியால் பிறப்பிக்கப்பட்ட சம்மன் உத்தரவுக்கு எதிராக அப்பெண்ணின் கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பையும் கருத்துக்களையும் வழங்கியது.
வழக்கின் பின்னணி :
இந்த தம்பதி நவம்பர் 25, 2022 அன்று திருமணம் செய்துகொண்டனர். ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024-ல், தனது கணவரின் உடல் இயலாமை மற்றும் மருத்துவ நிலை காரணமாகத் தங்களுக்குள் தாம்பத்திய உறவு ஏற்படவில்லை என்று கூறிய அந்த பெண் குடும்ப வன்முறைச் சட்டங்களின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கினார். மேலும், அவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணைக் கொடுமை வழக்குகளையும் பதிவு செய்தார்.
இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, கணவர் அவதூறு புகார் ஒன்றை தாக்கல் செய்து, தன்னை ஆண்மையற்றவர் என்று அழைத்ததன் மூலம் தனது மனைவி சமூகத்தில் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவிட்டதாக வாதிட்டார்.
மனுதாரரான அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில், தனக்கு எதிரான அனைத்து குற்றவியல் வழக்குகளையும் வாபஸ் பெறுமாறு அவரை வற்புறுத்துவதற்காகவே, அப்பெண்ணின் கணவர் பிப்ரவரி 1, 2024 அன்று அவர் மீது அவதூறு புகார் தாக்கல் செய்ததாக வாதிட்டார்.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் டிசம்பர் 21, 2024 அன்று மனைவிக்கு எதிராக சம்மன் அனுப்பியிருந்தது.. இதை எதிர்த்து அந்த பெண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், உறுதியான மருத்துவ ஆதாரம் இல்லாமல் ஒருவரைப் பகிரங்கமாக ஆண்மையற்றவர் என்று அழைப்பது, முதல் பார்வையிலேயே அவதூறாக அமையக்கூடும் என்று தீர்ப்பளித்தது. “இருப்பினும், அத்தகைய குற்றச்சாட்டு ஒரு செல்லுபடியான புகார் அல்லது சட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நல்லெண்ணத்துடன் மற்றும் ஒரு தகுதிவாய்ந்த அதிகாரியின் முன்னிலையில் முன்வைக்கப்பட்டால், அது இந்திய தண்டனைச் சட்டத்தின் 499-வது பிரிவின் விதிவிலக்கின் கீழ் பாதுகாக்கப்படலாம்,” என்று அது கூறியது.
அப்பெண் விவாகரத்து கோரி ஒரு மனுவையும் தாக்கல் செய்தார்.. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம், ஒருவேளை மருத்துவப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, திருமணம் முழுமை பெறாமல் (உடல்ரீதியாக நிறைவேறாமல்) இருந்திருந்தால், இத்தகைய வழக்கு விவாகரத்துக்கான ஒரு காரணமாக அமையக்கூடும் என்று குறிப்பிட்டது.
“அப்பெண் முன்வைத்த குற்றச்சாட்டுகள், எவரையும் காயப்படுத்தும் தீய நோக்கத்துடன் கூறப்பட்டவை அல்ல; மாறாக, அவை ஒரு உண்மையான புகாரின் ஒரு பகுதியாகவே முன்வைக்கப்பட்டுள்ளன,” என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
Read More : எபோலா பரவல் : இந்த மாதம் நடைபெற இருந்த இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு ஒத்திவைப்பு..!



