ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்திய ஒன்றிய அரசு அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கோ, உகாண்டா, சூடான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்காக புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்களுக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு, வாந்தி, பலவீனம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், எபோலா பரவலை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தனிப்பட்ட எபோலா சிகிச்சை வார்டுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், நோயாளிகளை பாதுகாப்பாக மாற்றும் வகையில் சிறப்பு ஆம்புலன்ஸ்கள் தயாராக வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் மிக ஆபத்தான தொற்று நோய்களில் ஒன்றாக கருதப்படும் எபோலா வைரஸ், மனிதர்களிடையே வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதனால் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
Read more: பக்ரீத் பண்டிகை.. பசு, ஒட்டகங்களை பலியிட்டால் கடும் நடவடிக்கை.. டெல்லி அரசு எச்சரிக்கை..!



